புத்ராஜெயா:

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர் நோக்கி இருக்கும் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளைச் சேர்ந்த இந்திய வர்த்தக சங்கங்கள் இன்று இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோடன் முக்கிய சந்திப்பை நடத்தினர்.

கடந்தாண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மூலம் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு 7,500 அந்நியத் தொழிலாளர்கள் வழங்கப்படும் என அறிவித்தார்.

ஆனால் இந்த அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதில் இந்திய முடித்திருத்தும் நிலையங்கள், ஜவுளி வர்த்தகர்கள், நகைக்கடைகள் பெரும் சிக்கலை எதிர்நோக்கி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ ஆகியோருடன் இன்று சந்திப்பு நடத்தப்பட்டது.

மைக்கி எனப்படும் மலேசிய இந்திய தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராஜசேகரன், மலேசிய இந்திய பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல்,  மலேசிய இந்திய ஜவுளிக்கடை உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் டத்தின் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் கோலாலம்பூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன், துணை தலைவர் பிரபாகரன், உதவித் தலைவர் பன்னீர் செல்வம், பொருளாளர் செல்வராஜ் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பு நல்ல பயனாக அமைந்தது என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.