கோலாலம்பூர்: மார்ச் 3 –
இந்திய பாரம்பரிய தொழில் துறையினர் எதிர் நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கட்டும் என்று மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.
இந்திய பாரம்பரிய தொழில் துறையினர் எதிர் நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர் பிரச்சினையை அமைச்சரவைக்கு கொண்டு செல்ல அமைச்சர் கோபிந்த் சிங் உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் கோபிந்த் சிங் டியோவின் சிறப்பு அதிகாரி சுரேஷ் சிங் இதனை உறுதிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் சொன்னார்.
இது எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் நிரந்தர தீர்வுக்கு காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக 3 இந்திய தொழில் துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்கள் கிடைக்காமல் இருந்து வருகிறது.
நகை, பொற்கொல்லர், ஜவுளி, முடித் திருத்துவோர் ஆகிய தொழில் துறைகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த 3 தொழில் துறைகளுக்கும் 7,500 அந்நியத் தொழிலாளர்களை ஒதுங்கினார்.
அப்போது மனிதவள அமைச்சராக இருந்த வி சிவகுமார் எங்களுக்கு அந்நியத் தொழிலாளர்களை பெற்றுத் தர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
ஆனால் இப்போது அவர் அமைச்சராக இல்லை.
இந்திய சமுதாயத்தின் சார்பில் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கோபிந்த் சிங் டியோ எங்களுக்கு உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் அவர்.
தொழிலாளர்களுக்கான விண்ணப்ப விதிமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளன.
இதனால் இத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் சுணக்கம் கண்டு வருகின்றன.
இது தொடர்பில் மலேசிய இந்திய பொற்கொல்லர் நகை வணிகர்கள் சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் இலக்கவியல் அமைச்சரின் சிறப்பு அதிகாரி சுரேஸ் சிங்கை சந்தித்து பேசினோம்.
எங்களின் பிரச்சினைகளை அவர் கேட்டறிந்தார். அதே வேளையில் இந்த பிரச்சினை அமைச்சரவையின் பார்வைக்கு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கொண்டு செல்வார் என அவர் கூறினார்.
இதன் வாயிலாக இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நம்புகிறோம் என்று டத்தோ அப்துல் ரசூல் கூறினார்.
Comments