கோலாலம்பூர் ஏப்ரல் 24-
சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சய திருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள்.

எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளில் தங்கம் வாங்க உகந்த நாளாகும்.

அந்த வகையில் மலேசிய முழுவதும் மே 10 ஆம் தேதி அட்சய திருதியை தங்க நாளில் மலேசியர்கள் தங்கம் வாங்கி நன்மை அடையும்படி மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டுள்ளார்.

மே 10 ஆம் தேதி தங்க திருநாளை முன்னிட்டு காலை 9.00 மணிக்கெல்லாம் நகைக் கடைகள் திறக்கப்படும். மறுநாள் சனிக்கிழமையும் அட்சய திருதியை விற்பனை தொடர்வதால் வாடிக்கையாளர்கள் நகைகளை வாங்கி மகிழலாம்.

இவ்விரு நாட்களில் வாடிக்கையாளர்கள் தங்கள் விரும்பிய நகைகளை தேர்வு செய்து நகைகளை வாங்கி கொள்ளலாம் . தங்கம் வாங்கினால் அது பிற்காலத்தில் அவசரத்திற்கு பயன் படுத்தி கொள்ளலாம்.

மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் அது மிகப் பெரிய லாபத்தை கொடுக்கும் என்றார் அவர். இவ்வாண்டு அட்சய திருதியை திருநாளில் தங்கம் விற்பனை அமோகமாக இருக்கும்- என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.